நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் மாதம் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 


நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் நடுகடலுக்கு சென்ற அமைச்சர் கப்பல் வரும் பாதை மற்றும் துறைமுகத்தில் தூர்வாரும் பணி உள்ளிட்டவர்களை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள், பயணியர் முனையம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.



 

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அமைச்சர் எ.வ.வேலு  பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 

“நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேச துறைமுகத்திற்கு  கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறையுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 150 பயணிகள் பயணம் செய்யும் வகையில் பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பட்சத்தில் தெரிவித்தார்.



 

மேலும் நாகப்பட்டினம்.துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் வரும் 2ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் ஒன்றிய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் கல்வி, மருத்துவம் மேம்பட இந்தியா இலங்கை கப்பல் சேவை பாலமாக அமையும் வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால துறைமுகத்திலிருந்து தொடங்கும் கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என கூறினார். இந்தியாவிற்கு வரும் இலங்கை பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு குறித்த படைப்புகள் சுவர் ஓவியங்களால் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.