தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வரும் 9ம் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தஞ்சாவூர் ஆகியவை இணைந்து கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் வரும் 9ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றம் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடக்கிறது.


இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.


இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். இம்முகாமில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனையும் மற்றும் சுயத்தொழில் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.


இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


உலகளாவிய மந்தநிலை ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த சில மாதங்களில் அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் 7.8% ஆக உயர்ந்துள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, நகர்ப்புற வேலையின்மை 8.4% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 7.5% ஆக உள்ளது. பிப்ரவரியில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5 சதவீதமாக இருந்த நிலையில் மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மாநில வாரியாக வேலைவாய்ப்பின்மை விபரங்களில் அதிகபட்சமாக ஹரியானாவில் - 26.8%, ராஜஸ்தானில் - 26.4%, ஜம்மு காஷ்மீரில் - 23.1%, சிக்கிமில் - 20.7%, பீஹாரில் - 17.6%, ஜார்க்கண்டில் - 17.5% மும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் - 0.8% , புதுச்சேரியில் - 1.5 % மும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. மேலும் உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் துயரப்படக்கூடாது என்பதற்காக சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.