மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மாதிரிவேளூர், பாலூரன் படுகை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து எடுக்கப்படும் மணல் குன்னம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள யார்டில் சேமித்து வைக்கப்பட்டு ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்படுவதுடன், பர்மிட் பெறப்பட்ட லாரிகளுக்கு மட்டுமின்றி, பர்மிட் பெறாத லாரிகளுக்கும் கூடுதல் தொகைக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 




இந்நிலையில், விஜயதசமி அரசு விடுமுறை தினமான நேற்று மணல் குவாரி இயக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்பட்டது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து புத்தூர் மதுகடி என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த  200க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 




அப்போது அவர்கள் அரசு விடுமுறை மற்றும் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி இயக்கப்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.




மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தெருவில், சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் பயன்படுத்த முடியாத வகையில் காவிநிறத்தில் இருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் , மற்றும் அரசு பணிக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், ஊராட்சி நிர்வாகத்திடமும், குத்தாலம் ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


Sonia Gandhi: ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இணைந்த சோனியா காந்தி.. வைரலாகும் புகைப்படம்..




இதனால் ஆத்திரமடைந்து இன்று திடீரென  மயிலாடுதுறை - திருவாருர் செல்லும் முக்கிய சாலையில் காலிகுடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெரம்பூர் காவல்துறையினர், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தி உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியல் போராட்டத்தை பொதுமக்கள் விலக்கி கொண்டு கலைந்து சென்றனர்.