மத்திய அரசு கோபப்படுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு ஊசி டெண்டருக்கு யாரும் வரவில்லை என திருவாரூரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

 

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் பகுதியில் குறுவை சாகுபடி பணிகளை ஆய்வு செய்தார்.அதன்பின்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படியும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனையின்படியும் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 40% தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

 

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் வருவதற்கு இரண்டு மாத காலம் ஆகும். இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். அதனைத் தவிர்க்கும் விதமாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடவு பணிகள் நடைபெற்றுள்ளன. தண்ணீர் வந்தவுடன் மீதமுள்ள பரப்பளவிலும் சாகுபடி பணிகள் தீவிரமடையும்.



 

குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்றவை கையிருப்பில் உள்ளன. அதற்கான ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகள் மூலமாக சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உரங்களின் விலையை கூடுதலாக வைத்து விற்கப்படும் தனியார் கடைகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைக்கு உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் தேவையான அளவிற்கு அரசிடமும் தனியாரிடமும் உரங்கள் கையிருப்பில் உள்ளன. குறுவை சாகுபடிக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை.  தற்போது 1.38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு உரங்கள் குறுவை சாகுபடிக்கு தேவை. தற்போது வரை 42 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உரங்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப தொடர்ந்து வழங்கப்படும்.

 

கோடை சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வரும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் வேளாண் தொழிலில் ஏற்பட்ட தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.



 

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை கேட்டுக்கேட்டு  பெற்றுக் கொண்டிருக்கிறோம். தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கலாம். மத்திய அரசு தடுப்பூசிகளை தேவையான அளவு வழங்கவேண்டும். அப்படி இல்லை என்றால், அந்தந்த மாநிலங்கள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும். தமிழக அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு இதுவரை யாரும் டெண்டர் கோரவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கோபப்படுமோ என்ற அச்சத்தில் யாரும் கொரோனா தடுப்பு ஊசி டெண்டருக்கு வராமல் இருக்கலாம். தனியார் நிறுவனங்கள் தமிழக அரசு அறிவித்துள்ள தடுப்பூசி டெண்டருக்கு வரவேண்டும்” என்றார்.

 

ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு பொன்னம்மாள், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு மற்றும் மூன்று மாவட்டங்களை சேர்ந்த வேளாண்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.