கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணியை மேற்கொண்டனர். இதற்கிடையில் மன்னம்பாடி ஊராட்சி சார்பில், அந்த பெரிய ஏரியில் மீன் வளர்க்க குத்தகை விடப்பட்டது. இதனை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். மீன்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தன. விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீரின் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயில் சுட்டெரித்ததாலும் ஏரியில் தண்ணீர் குறைந்து வந்தது.
மன்னம்பாடி கிராமத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மன்னம்பாடி, இடையூர், படுகளாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன் பிடிப்பது வழக்கம். எனவே ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க குத்தகைதாரர் திட்டமிட்டார். அற்காக ஏரியில் இருந்த தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி, மீன்களை பிடித்து, விற்பனை செய்து வந்தார். இதையடுத்து குத்தகைகாலம் முடிந்ததை அடுத்து நேற்று ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது. அதன்படி மீன்களை பிடிக்க மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து போட்டி, போட்டு ஏரியில் மீன்பிடித்தனர். அவர்கள் வலைகளைக் கொண்டும், கைகளால் துளாவியும் ஏரியில் இறங்கி போட்டி போட்டு ரகம், ரகமான மீன்களை பிடித்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவிலான மீன்களை அள்ளினர். கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால், கொரவை உள்ளிட்ட ரக மீன்கள் அதிகளவில் பிடிபட்டன. இந்நிலையில் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமயிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கிராம மக்கள், தாங்கள் பிடித்து வைத்திருந்த மீன்களுடன் நாலாபுறமும் ஓடினர். மேலும் எந்நேரத்திலும் பொதுமக்கள் மீன்பிடிக்க ஏரிக்குள் இறங்கலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலையில் கிராமப்புறங்களில் தொற்று அதிகரித்து, உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவைப் மதிக்காமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஏரியில் மீன் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.