தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த எம்.பி., கல்யாணசுந்தரத்திடம் அந்த பதவியை அதிரடியாக பறித்து எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகனிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது திமுக தலைமை. இதன் பரபரக்கும் பின்னணி என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. மக்களின் மனநிலை, கட்சி நிர்வாகிகள் குமுறல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறது திமுக தலைமை, தேர்தல் நேரத்தில் எவ்வித சறுக்கலும் ஏற்படக்கூடாது என்பதாக கட்சி நிர்வாகிகள் கூறும் தகவலுக்கு ஏற்ப திமுகவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக எம்பி கல்யாணசுந்தரத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக எம்எல்ஏ., சாக்கோட்டை அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தொகுதி நிலவரங்களை ஆராய்ந்து வருகிறது. இதற்காக கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகம் வரை ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோடு ஷோ நடத்தி மக்களின் மனநிலையை ஆராய்ந்து வருகிறது. மறுபுறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போதே தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி விட்டார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். ஒவ்வொரு தொகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.
இதற்கிடையில் திமுகவும் கட்சி நிர்வாகிகளை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து தனித்தனியாக அவர்களின் நாடித்துடிப்பை, மனக்குமுறல்களை கேட்டு வருகிறது. இந்த சந்திப்பு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீது அளிக்கப்படும் புகார்களை புறந்தள்ளாமல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்.
ஏற்கனவே மதுரையில் மண்டல குழு உறுப்பினர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரையும் ராஜினாமா செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போல பல உட்கட்சி பிரச்சனைகள் குறித்து உடனடி தீர்வாகவும், கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் திமுக எம்பியான கல்யாண சுந்தரத்தின் செயல்பாடுகளுக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் எழுதி கொடுக்கும் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் கூறப்பட்ட விவகாரம், கும்பகோணத்தில் நிதி நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தி.மு.க எம்.பி கல்யாணசுந்தரம் தடுப்பதாக புகார் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரது மகனும் திமுக கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்துசெல்வம் நடவடிக்கைகள், கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்லாதது என பல்வேறு புகார்கள் குறித்து திமுக நிர்வாகிகள் ஆதாரங்களுடன் முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எம்.பி., கல்யாணசுந்தரம் கட்சி பதவியில் நீடித்தால் நிர்வாகிகள் யாரும் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திமுக எம்பியான கல்யாண சுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பை திமுக தலைமை பறித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் உத்தரவின் பேரில் வெளியாகியுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம் அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது தஞ்சை மாவட்ட அரசியல் அரங்கை பரபரவென பற்ற வைத்த ஆயிரம் வாலா சரம் போல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது உற்சாகமாக. கட்சி நிர்வாகிகள் இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளின் உணர்வை புரிந்து செயல்படுகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.