மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான சிவலிங்கம்.  இவரது தலைமையில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்களான 5 குடும்பத்தை சார்ந்த 30 க்கும் மேற்பட்டோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு தலைஞாயிறு கிராமத்தில் உள்ள வீர அய்யனாறு கோவிலுக்கு குல தெய்வ வழிப்பாட்டிற்கு சென்றனர். அங்கு இறை வழிப்பாட்டின் போது கற்பூரம், பத்தி, சாம்புராணி உள்ளிட்ட புகை உருவாகும் பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். அப்போது ஏற்பட்ட புகையால் கோவில் ஆலமரத்தில் கூடு கட்டிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் திடீரென்று கூட்டை விட்டு வெளியேறி கோவில் பூஜையில் இருந்தவர்களை விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியது. 

Continues below advertisement




இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என  25 க்கும் மேற்பட்டோர் கதண்டு கடித்ததில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து, விஷ வண்டு கடிக்கு ஆளானவர்களை மீட்டு மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 




இந்த விஷ வண்டுகள் கூடுகளை விட்டு கூட்டமாக திரண்டு அதிக விஷ தன்மையுடன் தாக்கும்  தன்மை கொண்டது. பெரும்பாலும் இந்த வண்டுகள் கிராமப்புறங்களில் உள்ள பழமையான மரங்களில் தான் அதிகளவு காணப்படுகிறது. மேலும் பல நேரங்களில் வயல் மற்றும் நூறு நாள் வேலைகளில் ஈடுபட்டும் நபர்களையை இது அதிகமாக தாக்கியுள்ளது. விஷ வண்டுகள் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கிராமத்தில் இருந்து நகர் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு சென்று உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்க முடியாமல் அதிக உயிரிழப்புகளும் நடந்தேறி வருகிறது.




மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் அங்கங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சூழலில் தலைஞாயிறு கிராம மக்கள்  கோவில் உள்ள இந்த  விஷ கதண்டு வண்டுகள் மீண்டும் யாரையும் கண்டிக்கும் முன்பு உடனடியாக அதிகாரிகள் அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.