தஞ்சாவூர்: தற்போதைய காலநிலை மாற்றத்தால் நெற்பயிரிலை இலைசுருட்டுப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இந்த இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் (பொ) சாந்தி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


இதுகுறித்து அவர்  மேலும் தெரிவித்துள்ளதாவது: நெற்பயிரில் தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினால் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.


தூர் பிடிக்கும் பருவத்தில் இளம் பயிர்களை தாக்கும்


நெல் வயல்களில் வளரும் அல்லது தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றது. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும்.


வயல் வெண்மையான நிறத்தில காட்சியளிக்கும்


தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இப் பூச்சியின் தாக்கம் இருக்கும் சமயத்தில் தழைச்சத்து உரம் இடுவதை குறைத்து கொள்ள வேண்டும். சேதம் விளைவிக்கும் பூச்சி களை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
முதிர் பூச்சிகள் பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது


தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் கூட்டுப் புழுக்களாக இருக்கும். அந்துப்பூச்சியான முதிர் பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும் இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும்.


இலைச்சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தும் வழிகள்


நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலை சுருட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல், களைகளை நீக்கியும் இப்பூச் சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். நெற்பயிரின் வளர்ச்சி பருவத்தில் பூச்சிகளை உண்ணும் பறவைகள் அமர்வதற்காக தென்னை மட்டைகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே வயல்களில் வைக்க வேண்டும். 


வளர்ச்சிப்பருவத்தில் சேதம்


பொருளாதார சேத அளவு வளர்ச்சி பருவத்தில் 10 சதவீதம், இலைச்சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலைச்சேதத்திற்கு மேற்பட்டால் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.