தஞ்சாவூர்: தமிழ்த்தாய் வாழ்த்தை அனைவரும் முழுமையாக உணர்வுப்பூர்வமாக அனுபவித்து பாட வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா  வலியுறுத்தினார்.


தஞ்சையில் லாங்வால் மால் துவக்க விழாவில் குத்து விளக்கு ஏற்றி  வைத்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: 


தமிழகத்தில் முக்கிய நகரமாக தஞ்சையை மாற்றுவதில் முதல்வர் தீவிரமாக உள்ளார். தஞ்சை நகரில் தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதில்  அரசு தெளிவாக  உள்ளது. விவசாய மக்கள் நிறைந்துள்ள இந்த பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.


படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் சமூக கட்டமைப்பு முக்கியமாக உள்ளது. தமிழக அரசு ஆணையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அனைவரும் பாட வேண்டும் என்று உள்ளது. அடுத்த முறை தமிழ்த்தாய் வாழ்த்தை கேசட்டில் போட்டு பாடாமல் அனைவரும் முழுமையாக, உணர்வுப்பூர்வமாக அனுபவித்து பாட வேண்டும்.




தமிழ்த்தாய் வாழ்த்தை உச்சரிக்கும் பொழுது. அதன் சிறப்பை சொல்லும் பொழுது. தமிழகத்தின் சிறப்பையும் தமிழ் இனத்தின் சிறப்பையும் நீங்கள் உணர முடியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்கிற உணர்வு முழுமையாக வரும். இந்திய அளவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.


தஞ்சாவூர் அருகே அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற்பேட்டை அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். இதில், நிறைய நிறுவனங்கள் தொழில்கள் தொடங்க ஆர்வம் காட்டுவதால், பணிகள் விரைவாக தொடங்கப்படவுள்ளன.


தமிழ்நாடு தனித்துவம் மிக்க ஒரு நாடு. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது இந்தியா பற்றி பேசும்போது இந்தியா பற்றிய ஒரு கட்டமைப்பு மக்கள் மனதில் இருக்கும். அதை எடுத்து அப்படியே ஓரமாக வைத்து விடுங்கள். தமிழ்நாடு என்பது வேறு. எங்களுக்கு என்று சிறப்பு இருக்கிறது எங்கள் மாநிலத்தை பிற மாநிலத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். தமிழ்நாட்டை ஒப்பிடும் பொழுது வளர்ந்த நாடுகளுடன் தான் ஒப்பீடு செய்ய வேண்டும் 


அப்படிப்பட்ட மகத்தான நாடு தமிழ்நாடு என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். தஞ்சாவூர் போன்ற நகரங்கள் தொழில்துறையில் வளர்ச்சியடைய தரமான சாலை வசதிகளும், உணவகம் உள்ளிட்ட அனைத்து  அத்தியாவசிய தேவைகளும் கிடைக்கக்கூடிய பெரும் வணிக வளாக வசதிகள் உள்ளிட்ட சமூக கட்டமைப்புகள்  இருந்தால் தான் தொழில்துறையினர் தொழில் துவங்க  வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பரம்பரை அறங்காவலர் பாபாஜி பான்ஸ்லே, நிறுவனர் இளங்கோவன், வள்ளி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டனர்.