தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக திமுகவை சேர்ந்த சேகர்பாபு பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை நிலை குறித்தும், அவற்றை மேம்படுத்துவது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு கோவில் நிலங்களை பல இடங்களில் மீட்டுள்ள அமைச்சர், இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனது ஆய்வினை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுசெய்து, நிறைவாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்  அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கி வரும் பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் இரவு ஆய்வு மேற்கொண்டார். 




அதனையடுத்து அங்குள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை புதுப்பிப்பது மற்றும் நவீன உட்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து  அங்கு உள்ள வகுப்பு அறைகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் கல்லூரியில்  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தேவை குறித்து கேட்டறிந்தார். 





முன்னதாக காலை முதல் தொடர் ஆய்வு பணிகளை மேற்கொண்டுவருவதால் காலதாமதமாக பூம்புகார் கலைக் கல்லூரிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செல்போனில் உள்ள டார்ச் விளக்கின் வெளிச்சத்தில்  இருளில் கல்லூரி சுற்றுப்புறத்தை ஆய்வு செய்தார். 




அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கூட்டத்தின் நடுவே அமைச்சரின் காலடியில் குட்டி பாம்பு ஒன்று  புகுந்தது, அதனை கண்ட என்பிசி மாணவர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அமைச்சரை மீது கைவைத்து தள்ளி அவரை அப்புறப்படுத்தினார். பாம்பை கண்டதும் அமைச்சர்களுடன் வந்தவர்கள் அதிர்ந்தனர். பின்னர் அது மண்ணுளிப் பாம்பு என்பது அறிந்து அனைவரும் நிம்மதியடைந்தனர். மேலும்  அமைச்சரும் சேகர் பாபு பாம்பை அடித்து விடாதீர்கள் என தடுத்து அனைவரையும் கலைந்து போகச்சொன்னார். இதனால் சற்று நேரம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.