இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் தனிநபர்கள் பூஜை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்

 

திருவாரூர் தியாகராஜர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு நடத்தினார்.  திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள கல்தேர் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதேபோன்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் யானை செங்கமலத்துக்கு பழம், கரும்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார். யானை செங்கமலத்துக்கு நீச்சல் குளம் கட்ட இடம் தேர்வு செய்து, பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து கோயில் யானைகளுக்கும் இது பொருந்தும். இது குறித்து அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தன்னுடன் வந்திருந்த இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் தெரிவித்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் தனிநபர்கள் யாரேனும் பூஜை செய்வதே ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை எப்படிப்பட்ட உயர் பதவியில் இருந்தவர்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள கல்வெட்டில் மனுநீதிச் சோழன் மணிமண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் 



அதனைத் தொடர்ந்து பேசுகையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் சுற்றுலாத் துறையுடன் நினைத்து படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தில் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா இல்லை என்பதால், திட்டத்தின் பயன் மறுக்கப்படுகிறது. இதனால் கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அமைச்சர்,கடந்த 2008ம் ஆண்டு  திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட அரசாணையின்படி,  குழுவாக ஆக்கிரமிப்பில் உள்ளவர்களை திருக்கோயில்களில் வாடகை தாரர்களாக மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.   அதன்படி வாடகை தாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். 

 

5 ஆண்டுகள் கோயில்களில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கனை நிரந்தப்படுத்துவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே விரைவில் நிரந்தரப்படுத்தி அனைவரும் வாழ்வில் ஏற்றம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். முன்னதாக முத்துப்பேட்டை பெரியநாயகி அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.