திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள எடையூர் பகுதியை சேர்ந்தவர் ரஜினி பாண்டியன். இவர் வளரும் தமிழகம் என்ற கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளார். அதாவது ஜான் பாண்டியன் தொடங்கிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியிலிருந்து விலகிய ரஜினி பாண்டியன் எடையூர் பகுதியை சேர்ந்த பட்டாபிராம் என்பவருக்கு ஆதரவாக அவர் தொடங்கிய புதிய கட்சியான வளரும் தமிழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவரை வடசங்கேந்தி என்னுமிடத்தில் எட்டு பேர் கொண்ட மர்ம நபர்கள் வாகனத்தை மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த ரஜினி பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரஜினி பாண்டியனை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். மேலும் பதற்றம் நீடிப்பதால் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தபோது, “வளரும் தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரஜினி பாண்டியனுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி பாண்டியனின் ஆதரவாளர் டிராக்டர் ஓட்டி வந்த பொழுது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் டிராக்டர் ஓட்டி வந்த டிரைவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து எடையூர் காவல் நிலையத்தில் டிரைவர் புகார் அளித்துள்ளதாகவும் டிரைவர் புகார் அளித்ததற்கு ரஜினி பாண்டியன்தான் காரணம் என நினைத்து இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தங்களுடைய முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி எடையூர் சங்கேந்தியை சேர்ந்த மகாதேவன் மற்றும் ராஜேஷ் என்பவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரஜினி பாண்டியனின் உடல் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் அங்கு மருத்துவமனைக்கு எதிராக இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையை நடத்தி வருபவர் வீரக்குமார். இவர் மருத்துவமனை வளாகத்தில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். ரஜினி பாண்டியன் இறந்தது பற்றி தொலைபேசியில் பேசி வருகிறார் என நினைத்து ரஜினி பாண்டியனின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வீரகுமாரை கத்தியால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வீரகுமார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்துறைபூண்டி முதல் எடையூர் சங்கேந்தி வரை காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எடையூர் சங்கேந்தி கிராமம் பதற்றத்துடன் காணப்படுகிறது.