தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள ஆயத்தப் பணிகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் உக்கடை ஊராட்சியில் பருவமழை  ஆயத்தப் பணிகள், வயல்களில் மழைநீர் நிரம்பியுள்ளதை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பின்னர் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் நன்னான்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், குளத்தில் வடிகால் அமைத்து வயல்களுக்கு செல்லாமல் தண்ணீரை துரிதமாக வெளியேற்றப்படுவதை  உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் பட்டுக்கோட்டை வட்டம், கண்ணனாற்றின் பழைய பாலத்தில் நீர்வரத்து குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ராஜாமடம் பல்நோக்கு பேரிடர் மைய கட்டடத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார்நிலையில் இருப்பதை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்  பொதுமக்களிடம் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை  (பட்டுக்கோட்டை), அசோக்குமார்  (பேராவூரணி), உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெயஸ்ரீ  (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், வேளாண்மை இணை இயக்குநர் வித்யா அவர்கள், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், வட்டாட்சியர் பாக்யராஜ், பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை பெய்த மழையில் 35 குடிசை வீடுகளும், 26 மண் வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 4 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் ஒரு சில பகுதியில் மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக ஈச்சன்விடுதி 31.20 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று  பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.  வெட்டிக்காடு 14, ஒரத்தநாடு 25.20, அதிராம்பட்டினம் 18.10, நெய்வாசல் தென்பாதி 21.60, பேராவூரணி 20.60, அய்யம்பேட்டை 12, மதுக்கூர் 27.60, குருங்குளம் 16.60, தஞ்சாவூர் 12.30, பூதலூர் 11.80,  திருவையாறு 9, பாபநாசம் 8.80, கல்லணை 5, கும்பகோணம் 9, வல்லம் 3.20 என மாவட்டம் முழுவதும் 341.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


அதேபோல் மாவட்டம் முழுவதும் சராசரியாக 16.20 மி. மீ மழை பதிவாகி உள்ளது. இதுவரை பெய்த மழையில் மாவட்டம் முழுவதும் 35 குடிசை வீடுகளும், 26 மண் வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 4 கால்நடைகள் உயிரிழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாலை 6 மணியளவில் சிறு தூறல்களாக மட்டும் நகர் பகுதியில் பெய்தது.