தஞ்சாவூர்: விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.


ஈச்சங்கோட்டையில் தீர்வு மையம்


தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையத்தை தொடங்கியது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்யவும் இந்த தீர்வு மையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முதலில் திறக்கப்பட்டுள்ளது.


அதிக எண்ணெய் உற்பத்தித் திறன்


அதிக எண்ணெய் உற்பத்தித் திறன் மூலம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்வது பாமாயில் எனப்படும் எண்ணெய் பனையே. இந்த எண்ணெய் பனை தற்போது நாட்டில் 3.16 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.


கடைகளில் பாக்கெட் செய்து விற்கப்படும் கடலை எண்ணெயில் 60 சதவீதம் பயன்படுத்தப்படுவது எண்ணெய் பனையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான். தாவர எண்ணையான இதனால் எவ்வித கெடுதலும் இல்லை. இதன் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்கிறது.




பாமாயில் மரக்கன்று சாகுபடி விவசாயிகள்


இந்திய அளவில் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் பயிர்களில் முதலிடம் பிடிப்பது எண்ணெய் பனையாகும். இது சமையலுக்கு மட்டுமின்றி, அழகு சாதன பொருட்களாகவும், சில இடங்களில் வேறு சில பொருட்களுடன் கலவையான எரிபொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பாமாயில் மரக்கன்று சாகுபடி விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.


மாற்றுப்பயிராக எண்ணெய் பனை சாகுபடி


விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த தீர்வு மைய விழாவில்  அமைச்சர் டிஆர்பி.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது: மாற்றுப் பயிராக எண்ணெய் பனை சாகுபடி செய்ய விவசாயிகள் தமிழக தோட்டக்கலைத்துறை மூலம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்து வருகிறோம். பாமாயில் எண்ணெய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.


விவசாயிகள் கடன் வாங்காமல் கொடுப்பவராக முன்னேறணும்


இந்த பாமாயில் உற்பத்தியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பாமாயில் எண்ணெய் பனை தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த  விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும்.


ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்


தஞ்சாவூர் மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயும், அதே போல் நிலக்கடலை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணெயும் ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


விழாவில் தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவன முதன்மை செயல் அலுவலர் சவுதா நியோகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.