தஞ்சாவூர்: வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் தஞ்சை தொகுதியில் நிற்பதாக கூறப்படுவது யூகங்கள்தான். வரும் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று எப்போதும் நான் கூறியதில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று 10 மாவட்டங்களிலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் அமமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி என்பது குறித்து இம்மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் முடிவு செய்து விடுவோம். தஞ்சாவூர் தொகுதியில் நான் நிற்பதாகக் கூறுவது யூகங்களின் அடிப்படையிலான தகவல். வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நிற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் இவ்வாறு யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி உள்ளது.
பாராளுமன்றத்தில் இந்தியாவின் முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அங்கு கூடுகின்ற இடம். அங்கு சரியான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை. இதுபோன்ற ஊடுருவல்கள் இல்லாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி.க்களை இடை நீக்கம் செய்தது சரியான நடவடிக்கை இல்லை. இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
சென்னையில் புயல் வெள்ள பேரிடர் தொடர்பாக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காவிரி என்பது தமிழ்நாட்டுக்கு ஜீவாதார பிரச்சனை. மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். இது சட்டத்துக்கு புறம்பானது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நான் எப்போதும் கூறியதில்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் கூறியுள்ளேன்.
உண்மையான அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். சுயநலவாதிகள், பதவி வெறி பிடித்தவர்கள், பணவெறி பிடித்தவர்கள் அதற்கு ஒத்துவர மாட்டார்கள். கடைசி வரை நான் அமமுகவில் தான் இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.