தஞ்சாவூர் அருகே மினி பேருந்து ஓட்டுநரை முகமூடி அணிந்த வந்த மர்மநபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மினி பேருந்து ஓட்டுநர்:


தஞ்சாவூர் மாவட்டம் பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் சிவா (28). தனியார் மினி பஸ் டிரைவர். இந்நிலையில் நேற்று சிவா பஸ்சை கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை வரை இயக்கி வந்தார். பிறகு, தஞ்சாவூர்- கும்பகோணம்,பிரதான சாலையில் வழக்கமான இடத்தில், பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு, கண்டக்டர் ரவியுடன் டீ குடிக்க சென்றார்.


சரமாரி தாக்குதல்:


அப்போது, ஒரு பைக்கில் முகமூடி அணிந்து வந்த மூன்று மர்மநபர்கள்  சிவாவை  நடுரோட்டில் இழுத்து தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிவாவை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அந்த மர்மநபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதையும் படிங்க: Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..


சாலை மறியல்:


உடன் அப்பகுதி பொதுமக்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில்  போக்குவரத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.


தகவல் அறிந்த தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் மற்றும் அய்யம்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.