சென்னை ( Chennai News ): சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள், ஆன்லைன் திருமண மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மேட்ரிமோனி மூலம் கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் சித்திரைவிளையை சேர்ந்த விஜின் (27) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இரு வீட்டார் பேசி முடிவு செய்து இருதரப்பிற்கும் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.


திருமணத்தை நிறுத்த வந்த பெண்


இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், கடந்த 2 ஆம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை ஜே.பி.கோயில் தெருவில் திருமணம் நடக்க இருந்தது. அப்போது அங்கு திடீரென வந்த இளம் பெண், விஜின் தன்னுடன் கடந்த ஓராண்டுகள் மேலாக பழகி வருவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், தன்னிடம் பலமுறை அத்திமீறி நடந்து கொண்டதாகவும் பரபரப்பு புகாரை எழுப்பினார். என்னுடன் வாழ்ந்து விட்டு இப்போது வேறு திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, பிரச்சனையை ஏற்படுத்திய அப்பெண்ணை அங்கிருந்தவர்கள் வெளியேற்றினர்.


சமாளித்த மாப்பிள்ளை வீட்டார்


இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் பெண் வீட்டாரிடம் கேட்டபோது: இந்த பெண் ஏமாற்றுகிறார், பணம் பறிப்பதற்காக நாடகமாடுகிறார் என கூறி பெண் வீட்டாரை சமாதானம் செய்து திருமணத்தை நடத்தியுள்ளனர். இதனிடையே, மணமகனின் சமூக வலைதளத்தை பார்த்த பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர், பல பெண்களை ஏமாற்றியதாக விஜின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் இருப்பதாக பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.


முதலிரவை நிறுத்திய ம்ணப்பெண்


இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், முதலிரவை நிறுத்தியுள்ளார். உடனடியாக இளம் பெண் முதலிரவை நிறுத்தியத்துடன், விஜினின் செல்போனை சோதனை செய்தபோது, இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில் பல பெண்களுடன் விஜினுக்கு தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி அவரை 6 மாத கர்ப்பமாக்கியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து சமாதானம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.



வெளியான பரபரப்பு தகவல்கள்


கடலூரை சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்து விஜின் குடும்பமும் நடத்தி ஏமாற்றியுள்ளார். பெண்களை திருமணம் செய்து சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு பணம் மற்றும் நகைகளை சுருட்டிகொண்டு தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக விஜின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெண் வீட்டார் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.‌


புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜினை நேற்று கைது செய்தனர். விஜினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விஜினுக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை கிறிஸ்டோபர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். மாப்பிள்ளை மீது சந்தேகம் ஏற்பட்ட உடனே, முதலிரவை உடனடியாக நிறுத்தி மாப்பிள்ளையின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டு போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் நடந்து விட்டது என சகித்துக் கொண்டு இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்த, மணப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.