சீசன் தொடங்கியதால் தஞ்சை குடை மிளகாய் விற்பனைக்கு வருகை. தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் மட்டும் விளையும் குடை மிளகாய் சீசன் தொடங்கியதால், விற்பனைக்காக வந்துள்ளது. கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பெரும்பாலானோர் பழைய சோறும், மிளகாய் வற்றலை வறத்து சாப்பிடுவார்கள். இதனால் உடலில் வெப்பம் தணியும். அனைத்து வகையான மிளகாய்கள் இருந்தாலும், தஞ்சை குடை மிளகாய், பழைய சோறுக்கும் இணையாகாது. இதனால் தஞ்சை மாவட்டம் இல்லாது, வெளி மாவட்ட, மாநில, நாடுகளுக்கும், அவர்களது உறவினர்கள் தேடிப்பிடித்து பக்குவப்படுத்தி, குடைமிளகாயை வாங்கி பதப்படுத்தி அனுப்பி வைக்கும் பழக்கும் காலம்காலம் தொட்டு இன்றளவும் நடக்கிறது.
கோடை காலத்திற்கேற்ற குடை மிளகாய், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கானுார்பட்டி, செல்லம்பட்டி, மஞ்சப்பட்டி, வல்லம், மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் மானாவாரி நிலத்தில் குடை மிளகாய் விளையக்கூடியதாகும். கடந்த மார்கழி மாத பட்டத்தில் நடவு செய்து, தற்போது செடிகள் வளர்ந்து, குடை மிளகாய் காய்த்துள்ளது. இது போல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் குடை மிளகாய் சீசன் தொடங்கும். இங்கு விளையும் குடை மிளகாய்கள் தமிழகம் மட்டுமில்லாது, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சீசன் தொடங்கிய நிலையில் தஞ்சையில் சாகுபடி செய்து விளைந்த குடை மிளகாய் தஞ்சை மாவட்டம் முழுவதுமுள்ள பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், குடை மிளகாயை வாங்கி வந்து உலர்த்தி, காயவைத்து குடை மிளகாயில் துளையிட்டு, மோரில் ஊறவைத்து மீண்டும் வெயிலில உலர்த்தி வைத்து பதப்படுத்தி விடுவார்கள். இது போல் பக்குவமாக செய்தால், ஓராண்டு ஆனாலும் கெட்டு போகாமலும் சுவையாக இருக்கும். கடந்தாண்டு சீசன் நேரத்தில் கிலோ 80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சீசன் தொடங்கிய நிலையில் அதிக வரத்து இருப்பதால் தற்போது கிலோ குடை மிளகாய் 50 விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது மழை அதிகமாக பெய்துள்ளதால் குடை மிளகாய் அதிக வரத்து இருந்தால் குடை மிளகாய் விலை 30 ரூபாய் வரை குறையவதற்கு வாய்ப்புள்ளது என மிளகாய் வியாபாரி தெரிவித்தார். இது குறித்து குடை மிளகாய் விவசாயி கூறுகையில்,குடைமிளகாயை உணவில் நாம் அதிகமாக சேர்ப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. குடை மிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் இவை அனைத்தும் குறைவாகவே உள்ளது எனவே, குடை மிளகாய் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கலோரிகள் குறைந்தால் உடல் எடை வேகமாக குறையும்.
குடைமிளகாயில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளதால், வயது முதிர்வைத் தடுக்கும் தன்மை ஏற்படுகிறது. நம் தோலில் ஏற்படும் கருமை, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.மூட்டு வலிக்கி நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால்,உடலில் சர்க்கரை அளவுக் குறையும்.
கண்களுக்குத் தேவையான முக்கியமான சத்தான விட்டமின் எ குடை மிளகாயில் அதிகமாகவே உள்ளது. எனவே, இதனை குழந்தைகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். அவ்வாறு சிறு வயதில் இருந்தே கொடுப்பதனால் இளம் வயதிலே கண் தொடர்பான பிரச்சணைகளை அண்டவிடாமல் தடுக்கும். குடைமிளகாயில் உள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். குடைமிளகாயை உணவில் சேர்த்தால் விரைவில் ஜீரணம் ஆகிவிடும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாயை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும் என்றார்.