தஞ்சாவூர்: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து திரட்டிய புயல் நிவாரண பொருட்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 
மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை பெய்ததில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால் சென்னை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


இவர்களுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் மண்டல இயக்குனர் மாஹிம் அபூபக்கர் ஆகியோர் வாயிலாக அனுப்பப்படுகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி நிர்வாகம், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு, புடவை, துண்டு, பாய், போர்வை, பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில், பிரட் பாக்கெட், மருந்து பொருட்கள், குளியல் சோப்பு, துணி சோப்பு, குழந்தைகளுக்கான துணிகள், பெரியவர்களுக்கான துணிகள் என மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்பு நிவாரண பொருட்களை தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


இந்த பொருட்களை வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன், திமுக நகர செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் ஒப்படைத்தனர். இதேபோல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிர்வாகி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் வழங்கினார் .


‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் . இந்த நிலையில் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கென ரூபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் .   


இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி , மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .