நம் நாட்டில் இருந்து கடத்தப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட சிலைகளை, இனிமேல் திருட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன் 3டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ரேடியோ அலைவரிசை நவீன கருவி பொருத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடந்த ஓராண்டில் மட்டும் 187 புராதன சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மிக முக்கியமான சிலைகளை கைப்பற்றியுள்ளோம். 1962ம் ஆண்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகளை மீட்டுள்ளோம்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை எங்கு வைத்துள்ளனர் என தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த சிலைகளை விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலையின் உண்மை தன்மையை ஆராய்ந்து அந்தந்த கோவில்களில் ஒப்படைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிலைகளை, எக்காலத்திலும் மீண்டும் யாரும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி., உதவியுடன், 3டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ரேடியோ அலைவரிசை நவீன கருவி பொருத்தி பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் கோவிலுக்கு சொந்தமானது தான். மீட்கப்பட்ட சிலைகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிலை கடத்தல் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து 60 சிலைகள் இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் 10 முக்கிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 5 சிலைகள் தான் மீட்கப்பட்டுள்ளது. சில நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் வந்து சிலை கடத்தல் கூறுவது தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் பணிகளை துரிதமாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையம் அருகே நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சைலேந்திர பாபு திறந்து வைத்து கூறுகையில், தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.50 கோடியில் 1,400 கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களைக் குறைக்க வேண்டும் என்பதே நோக்கம்.
குறிப்பாக, வாகனங்களில் மோதிவிட்டு தப்பிச் செல்பவர்களின் புகைப்படம், வாகன எண்ணைக் கண்டறிந்துவிட முடியும். திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்துவிட்டு தப்பித்துச் செல்பவர்களையும், கடத்துபவர்களையும் கண்டறிவதற்கு இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். தூய்மையான நகரம், குற்றங்கள் இல்லா நகரம் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். தஞ்சாவூரில் நடந்த 5.50 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் முக்கியமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளோம். விரைவில் நகைகளை மீட்பதற்கான பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அனைத்து காவல் நிலையங்களிலும் நூறு சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டன. ஒரு காவல் நிலையத்தில் மட்டும் வேலை நடைபெறுகிறது.
குழந்தைகள் தற்கொலை தொடர்பாக உரிய புலன் விசாரணையைக் காவல் துறையினர் மேற்கொள்கின்றனர். தவிர, 222 மகளிர் காவல் நிலையங்களில் கவுன்சலிங் செய்யக்கூடிய ஆய்வாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளிடம் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாக ஆசிரியர்களோ, பெற்றோர்களோ அறிந்தால், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று ஆலோசனைக்கு உட்படுத்தலாம் என்றார்.
கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை இனி எப்போதும் திருட முடியாதபடி நடவடிக்கை; டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்
என்.நாகராஜன்
Updated at:
17 Sep 2022 04:38 PM (IST)
ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை எங்கு வைத்துள்ளனர் என தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
டிஜிபி சைலேந்திர பாபு
NEXT
PREV
Published at:
17 Sep 2022 04:38 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -