தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பௌர்ணமி வலத்துக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சையில் நடப்பது திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும். இதற்காக ஆலோசனை கூட்டமும் நடந்தது என்று மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
பெருவுடையார் திருக்கோயில் திரு தென் கைலாய வலம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற பௌர்ணமி வலத்துக்கு எதிர்பார்த்ததை விட பக்தர்கள் அதிகளவில் வந்தனர். 5 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ஆயிரம் பேர் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டனர்.
தஞ்சாவூரிலிருந்து மட்டுமல்லாமல், கும்பகோணம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பக்தர்கள் வந்தனர். திருவண்ணாமலை கிரிவலத்தை போன்று நடத்தப்படும் இந்த வலத்துக்கு சிவ பக்தர்கள் வேண்டுகோளின்படி, பெருவுடையார் திருக்கோயில் திரு தென் கைலாய வலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரணம் திருவண்ணாமலையில் நடப்பது கிரிவலம். இது மலைபாதையில் சுற்றி வருவது. அதனால் தஞ்சையில் நடப்பதை இனி திரு தென் கைலாய வலம் என்று அழைக்க வேண்டும் என்று பக்தர்கள், சிவத் தொண்டர்கள் வலியுறுத்தினர். அதன்படி இனி தஞ்சை பௌர்ணமி வலம் திரு தென் கைலாய வலம் என்று அழைக்கப்படும்.
வரும் 16 ஆம் தேதி மாலை முதல் 17ம் தேதி காலை வரை திரு தென் கைலாய வலம்
இந்த முறை வரும் 16 ஆம் தேதி மாலை முதல் 17ம் தேதி காலை வரை திரு தென் கைலாய வலம் நடைபெறும். இந்த வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். கடந்த மாதத்தை விட இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த திலகர் திடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால், பெரிய கோயில் அருகேயுள்ள மேம்பாலத்திலிருந்து பழைய நீதிமன்றச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும், ஏறத்தாழ 50 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலர்களிடம் கேட்கவுள்ளோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு காவல் துறையினருடன் கலந்து ஆலோசித்துள்ளோம்.
பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி, தற்காலிக சிற்றுண்டிகடை, அன்னதானம்
திரு தென் கைலாய வலப் பாதையில் பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி, தற்காலிக சிற்றுண்டி கடை, அன்னதானம் போன்றவை மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்புடைய துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பாதையில் தளம், மின்விளக்கு, ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமராக்கள் போன்றவற்றை 6 மாதங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் மூலம் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. திரு தென் கைலாய வலம் வரும் பக்தர்கள் சற்று ஓய்வெடுத்து கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.