இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா சென்னை, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற சங்க நிர்வாகிகள், போதைக்கு எதிராக சங்கரய்யாவின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர்.
அப்போது சங்க நிர்வாகிகளிடம் சங்கரய்யா கூறுகையில், "பிற பிரச்னைகளை விட மிக முக்கியமான பிரச்னை போதைப் பழக்கம்தான். மத தலங்களிலும் போதையின் தீமை குறித்துப் போதிக்க வேண்டும். கிராமப்புற கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் கூறுகையில், "பெருநகரம் தொடங்கி கிராமப்புறம் வரை குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருள் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சந்தைக் களமாக இந்தியா இருப்பது வருந்தத்தக்கது.
இதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தவில்லை. இதனாலேயே குஜராத் மாநிலத்தில் இருக்கும் அதானி துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 11 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்து திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்கும் வகையில் ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒருபோதை மீட்பு மையம் உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்தைப் பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு கொடுக்கப்படும்" என தெரிவித்தனர். மேலும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோர் போதை ஒழிப்புக்காகக் கையெழுத்திட்டனர். இதேபோன்று இதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கையெழுத்தை பதிவு செய்து வாழ்த்து தெரிவித்தார். இதுபோன்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்திய மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையிலான வாலிபர் சங்கத்தினர் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து கையெழுத்து பெற்றனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறுகையில், "போதையினால் ஏற்படும் தீமைகளை திருவள்ளுவர், அருணகிரிநாதர் உள்ளிட்ட நமது முன்னோர்கள் முழுமையாக விளக்கியுள்ளார்கள்.
மணிமேகலை, 11-ஆம் திருமுறை ஆகிய நூல்களிலும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இன்றைய இளைய சமுதாயத்தினர் மதுப்பழக்கத்துக்கு மட்டும் உள்ளாகி இருந்தால் அவர்களை மீட்டெடுத்து விடலாம். ஆனால் அவர்கள் உண்ணும் உணவு முதல், போதை மிட்டாய், போதை ஊசி போன்ற பயங்கர போதை பழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் நரம்பு தளர்ச்சி, மலட்டு தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனை சித்த மருத்துவத்தில் காட்டப்பட்டுள்ள உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி போதை பழக்கத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் வெளிவர வேண்டும். அனைவரும் போதைக்கு எதிராக உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.