தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் அசத்தி, மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த காமெடியன்களாக செந்தில், கவுண்டமணி ஆகியோர் இருவருக்கும் தனி இடம் உண்டு. இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி அப்போதைய காலகட்டத்தில் பட்டைய கிளப்பியுள்ளது. அந்த வகையில், கவுண்டமணியுடன் இணைந்தும், தனியாகவும், மற்ற சிலருடன் இணைந்தும் காமெடிகளில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் செந்தில். இவர் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்டமணியும் சேர்ந்து, அப்பாவியாகவும், குசும்புத்தனத்துடனும் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. அத்துடன் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் செந்தில்.
1951ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் பிறந்தவர் செந்தில். இவருடைய தந்தை ராமமூர்த்தி. செந்திலுக்கு முனுசாமி என்று பெயர் வைத்தார். அவருக்கு உடன் பிறந்தவர்கள் 6 பேர். அவர்களுள் செந்தில் 3வதுதாக பிறந்தவர். 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த செந்தில், தந்தை அவரை திட்டியததால், ஆத்திரத்தில் தனது 12 ஆவது வயதில் ஊரை விட்டு ஓடி வெளியேறினார். பிறகு என்ன செய்வது என்று தெரியாத அவர், முதலில், ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவர் பணியை தொடர விரும்பாமல், பின்னர் ஒரு மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். இப்படியாக பல வேலைகளை செய்த அவர், பின்னர் நாடகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது திறமைகளை வளர்த்தார்.
செந்தில் தனது அசாத்திய நடிப்பு மற்றும் காமெடி திறமைகளை பார்த்தவர்கள் திரையுலகத்தில் நுழைய உதவினர். அதன்படி சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், செந்தில் நடித்த மலையூர் மம்பட்டியான் படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது, செந்திலின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அதைத்தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார் செந்தில். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70 வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு திருக்கடையூர் கோயிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கஜபூஜை, கோபூஜை செய்து முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்று கோயிலுக்கு வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாலை மாற்றிக் கொண்டு மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் கோயிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 60 வயது பூர்த்தி அடைந்த போது இக்கோயில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.