மயிலாடுதுறையில் ஆடி மாதம் 18 - ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் மயிலாடுதுறை மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆடிப்பெருக்கை கொண்டாடுவர். அதேபோல், வரலாற்று சிறப்புமிக்க காவிய நகரமான பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக ஆடி பெருக்கின்போது காவிரி தண்ணீர் இன்றி ஆறுகள் வரண்டு காணப்படும் ஆனால் இந்தாண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் வெகு விமரிசையாக கொண்டாப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில் காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தடைவிதித்துள்ளார். அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும்  இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.




மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 41 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 457 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 16 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 28 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 269 ஆக உயர்ந்துள்ளது.




மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 405 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும். முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 28 ஆயிரத்து 631 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 46 ஆயிரத்து 774 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 41 ஆயிரத்து 954 பேருக்கு கோவிஷீல்ட் 3 லட்சத்து 33 ஆயிரத்து 451 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி  தொடரப்படுகிறது. நேற்று மட்டும் 3 ஆயிரத்து 928 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 717 ஆண்களுக்கும், 1 லட்சத்து 85 ஆயிரத்து 635 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.