திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலையொட்டி வெட்டப்பட்டு சிதிலமடைந்து வருகின்ற நல்லம்பல் ஏரி புத்துருவாக்கம் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் என்ற இடத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், கடந்த 2006-ஆம் ஆண்டு சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று வெட்டப்பட்டது. இந்த ஏரியை வெட்டுவதற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலத்தை அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி, புதுச்சேரி மாநில அரசு புதிதாக ஏரியை வெட்டியதுடன், ஏரியை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஏரியின் இயற்கை அழகை ரசிப்பதற்கு பல்வேறு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்தனர். அரசலாறு தண்ணீர், நூல் ஆற்றின் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் நிரம்பி வந்தது.
இந்த ஏரியில் நீர் நிரம்பியதன் பலனாக காரைக்கால் மாவட்டம் குமாரகுடி, சேத்தூர், பண்டாரவடை, நல்லம்பல், தாமனாங்குடி, பேட்டை, வளத்தான்மங்கலம், திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சேரி, மேனாகுடி, கீனாகுடி, உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இந்த ஏரி ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த பத்து வருட காலமாக ஏரி உரிய பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் வந்து அமரும் வகையில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகின்றது. ஏரி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே தூர்ந்து போய்க் காணப்படுகிறது. இந்த நிலையில் திருநள்ளாறு செல்கின்ற பக்தர்களின் வசதியைக் கருதியும், 25 கிராமங்களில் நீராதாரத்தை கருத்தில் கொண்டும் ஏரியை சிறப்பு நிதி ஒதுக்கி புதுச்சேரி மாநில அரசு முழுமையாக தூர்வாருவதன் மூலம் முழுமையாக பராமரிப்பு செய்திட வேண்டும் மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து அமர்ந்து இயற்கையை ரசிக்கும் வகையில் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்.
மேலும் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு நல்லம்பல் ஏரியின் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்படும் அதற்கான நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் இதற்கான எந்த பணியும் இதுவரை தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுவர்கள் என அனைவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாக இந்த ஏரியை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது. இதனால் தற்போது பொதுமக்கள் யாரும் நடைபயிற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளது உடனடியாக சாலையை புதுப்பித்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் ஏரியை சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.