வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில்  வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும்  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.




திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை விட்டுள்ளது. மற்ற பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.






இந்நிலையில்  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மாவட்டத்தில் மொத்தமாக 308.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் வெளிப்பிரகாரங்கள் மற்றும் சன்னதி தெருவில் தண்ணீர் தேங்கியுள்ளது.  




மழைநீர் வடிகாலில் உள்ள அடைப்புகளின் காரணமாக தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த நகராட்சி 23 -வது வார்டு கவுன்சிலர் சதீஷ் என்பவர் கொட்டும் மழையை பொருட்ப்படுத்தாமல் மழையில் நனைந்தவாறு மழைநீர் வடிகால் உள்ள அடைப்புகளையும், குப்பைகளையும் தன் கைகளாலேயே அள்ளி சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  வருகிறது.




மழை காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவமனை சாலை, புங்கனூர் சாலை ஆகிய பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து செல்வதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 




கடந்த வாரம் பெய்த மழையிலும் இதுபோல் தண்ணீர் கலந்ததால் இதனை கண்டித்து பொதுமக்கள் அப்போது சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் போது அதனை பேரூராட்சி நிர்வாகம் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் ‌.


இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கான கட்டணம் ரூ.719 ஆக நிர்ணயம்! மற்ற நாடுகளை விட அதிகம்…