தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை ஆனது, பிப்ரவரி 5 ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சிகளை சேர்ந்த கட்சி தலைவர்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மொர்ராஜியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், கூறியதாவது:
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு நகர்ப்புற தேர்தலில் பொதுமக்களிடையே உற்சாக வரவேற்பு உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெருவார்கள் என முழு நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து பேசியவர், பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய ஆட்களை ஆளுநர்களாக நியமனம் செய்து தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டை தெரிவித்தார். விரைவில் அதற்கு ஒரு நல்ல முடிவு வரும் என தெரிவித்த அவர், திமுகவும், சட்டமன்றமும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது என்றார். மேலும் நீட்தேர்வு தமிழகத்தில் அமல்படுத்த கூடாது எனவும் தெரிவித்தார். இப் பிரச்சாரத்தின் போது மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்ட காங்கிரஸ், திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் உடனிருந்தனர்.