மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது, கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய கூலி விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 258 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 




இந்நிலையில் இதேபள்ளியில் அருகில் உள்ள அகர பள்ளம் கிராமத்தில் இருந்து சென்று இப்பள்ளியில் படித்த 30 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அகர விடியல் என்ற சேவை அமைப்பை தொடங்கி ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில் அகர விடியல் சேவை அமைப்பை சேர்ந்த முன்னாள் மாணவரான மஸ்கட் நாட்டின் கட்டிடத் துறையில் பணிபுரிந்து வரும் மாதவன் தன் திருமண நாளில் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் எண்ணி திருமணம் நடைபெற்றதை அடுத்து, திருமணம் முடிந்த கையோடு அவர் மணமகள் தரணியை கையோடு கூட்டிக்கொண்டு தான் பயின்ற கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்து, தற்போது அங்கு படிக்கும் ஏழை எளிய 258 மாணவர்களுக்கு பேனா, பென்சில், நேட்புக், சிலேட் உள்ளிட்ட கல்வி பயில பயன்படும்  பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். 




மணமகனின் நண்பர்களான பிரபு, ஆனந்த், பாலாஜி, வீரபாண்டியன், சத்யராஜ், சதீஷ், பிரசாத் ஆகியோர் தங்களது நண்பனின் திருமண நிகழ்வை நெகிழ்ச்சி மிக்க நிகழ்வாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளிக்கு வந்த தம்பதியினருக்கு பள்ளி தலைமை ஆசிரியை சத்யா மற்றும் ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். 




தொடர்ந்து கல்வி உபகரணங்களை பெற்றுக்கொண்ட  மாணவர்கள் உற்சாகம் அடைத்தனர். திருமண நாளில் தங்கள் பள்ளிக்கு வந்து நல உதவிகளை வழங்கிய புதுமணத் தம்பதியினருக்கு மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்த்து கூறி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர் மீண்டும் தன் திருமண நாளில் தன் படித்த பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு உதவியை வழங்கிய சம்பவம் அக்கிராமத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ஒவ்வொரு அரசு பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் பள்ளியில் விட்டு வெளியே சென்று நல்ல நிலைமைக்கு சென்றபின் மீண்டும் தன் படித்த பள்ளியை மறவாமல் அங்கு சென்று பள்ளி முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்கி தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளையும் செயல்பட வைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.