திமுக கோட்டையாக இருந்த தஞ்சாவூர் தொகுதியை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. தொடர்ந்து, கடந்த தேர்தகளில் தஞ்சாவூர் நகராட்சி (இப்போது மாநகராட்சி), தஞ்சாவூர் மக்களவை தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது. அவற்றை எல்லாம் அதிமுக கைப்பற்றியது. திமுகவின் கோட்டையை இழந்த சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளை ஒரே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் திமுக மீண்டும் கைப்பற்றியது. அடுத்து 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்று அப்பெயரை தக்க வைத்துள்ளது.
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சியையும் கைப்பற்றுவதற்காக திமுக முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இதேபோல, 2011 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாநகராட்சியை (அப்போது நகராட்சி) கைப்பற்றிய அதிமுக, அதை தக்க வைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. தஞ்சாவூர் நகராட்சியில் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல் முதலாக அதிமுக வெற்றி பெற்றது. 150 ஆண்டுகளுக்கு மேலாக பழைமையான இந்த நகராட்சி 2014 ஆம் ஆண்டில் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. எனவே, முதல் மேயர் பதவியைப் பெறுவதில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டாலும், நகராட்சியாக இருந்த காலத்தில் இடம்பெற்றிருந்த 51 வார்டுகளுக்கு மட்டுமே இப்போது தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணியில் அதிமுக 50 வார்டுகளிலும், தமாகா ஒரு வார்டிலும், திமுக கூட்டணியில் திமுக 41 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. இதில், 40 வார்டுகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி இருக்கிறது.
தவிர, நாம் தமிழர் கட்சி 48 வார்டுகளிலும், அமமுக 43 வார்டுகளிலும், பாஜக 27 வார்டுகளிலும், எஸ்டிபிஐ 4 வார்டுகளிலும், பாமக 6 வார்டுகளிலும், தேமுதிக 3 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 2 வார்டுகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. மேலும் 47 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். திமுகவை பொருத்தவரை, கடந்த 9 மாதங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், உள்ளிட்டவற்றை முன் வைத்து பிரசாரம் செய்து வருகிறது. இதேபோல, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்களாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து அதிமுக, பாஜக பிரசாரம் செய்கின்றன. மேலும், நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
தஞ்சை மாநகாராட்சியில், பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை ஆள் நுழைவு குழாய்களிலிருந்து கழிவு நீர் வழிந்து சாலையில் ஆறாக ஒடி வருகின்றது. இதே போல, மாநகராட்சியில் போதுமான பணியாட்கள் இல்லாததால், குப்பைகளை அகற்றுவதிலும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை போன்றவற்றாலும் மாநகர மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், வணிகக் கட்டடங்கள் அகற்றப்பட்டு வருவதும், பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி, சண் ராமநாதன், நீலகண்டன் ஆகியோர் மேயராவதற்காக அதற்கான முயற்சியில் உள்ளனர்.ஆனால் சண் ராமநாதன், மேயரானால், எம்எல்ஏவாக உள்ள நீலமேகத்திற்கு இடையூர் ஏற்படும், நீலகண்டனுக்கும் எம்பி பழநிமாணிக்கத்திற்கு ஆகாததால், இவர்கள் இருவரும் மேயராவது சந்தேகம். ஆனால் அஞ்சுகம்பூபதி, எம்எல்ஏ, திமுக தலைமை அறிவித்தவுடன், தனது அரசு மருத்துவ தொழிலை விட்டு, எம்எல்ஏவாக போட்டியிட்டு, உள்கட்சி பூசலால் தோல்வியை தழுவினார். அதன் பிறகு உள்கட்சி பூசலில் சிக்கி கொள்ளாமல் கட்சி பணியை மட்டும் பார்த்து வருவதால், அஞ்சுகம் பூபதிக்கு மேயராக வாய்ப்புள்ளது.
இதே போல் தஞ்சை 1 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும், செந்தமிழ்செல்வன், 5 வது வார்டு கரந்தை பகுதியை சேர்ந்தவர், இவர், தனக்கு வாய்ப்பு கேட்ட போது, பொறுப்பாளர்கள், வார்டில் உள்ளவர்கள் மட்டும் அந்தந்த வார்டுக்கு வாய்ப்பு கேட்க வேண்டும் என்று கறாறாக கூறி விட்டார்கள். இவர், கரந்தை தமிழ் சங்க தலைவர் ராமநாதனின் பேரன் என்பதால், சென்னையிலுள்ள தனது உறவினர் மூலம் சீட் வாங்கி வந்தார்.இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால், தனக்கு மேயராகவோ அல்லத துணை மேயராகவோ கிடைக்க வாய்ப்புள்ளது என கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் கட்சி மேலிடத்தில் தொடர்பில் இருப்பதால், மற்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இதே போல் பாஜகவினர் மோடியின் சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்பதால், போட்டியிடும் 27 இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது.அதிமுகவில் பகுதி செயலாளராக நான்கு பேரில் அறிவுடையநம்பி, சரவணன் சீட் கேட்க வில்லை. ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரது வேட்பு மனு தள்ளுபடி ஆனதால்,தேர்தலில் போட்டியிட வில்லை.மேலும் நேர்காணலின் போது, வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்றும், கட்சி தலைமை பணம் கொடுக்காது என கறாக கூறி விட்டதால், பெரும்பாலான வேட்பாளர்கள், மிகவும் என்ன செய்வது என்று தெரியாமல் வாக்கு கேட்டு வருகின்றனர்.
தற்போது அதிமுகவில் வேட்பாளரான மூத்த உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான சண்முகபிரபு தேர்தலில் போட்டியிடுவதால், அவருக்கு மேயராக வாய்ப்புள்ளது. மற்றவர்கள் மேயராக வாய்ப்பு என்பது சிரமம் தான்.ஆனாலும், திமுக, மாநகராட்சியை விட்டு விடக்கூடாது என்பதில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வரும் நிலையில், பெரும்பாலான வார்டுகளில் அதிமுக கொஞ்சம் மந்தமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை மாநகராட்சியில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மேயர் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என இரு கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர்.