தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மீண்டும் பள்ளிகள் சீராக இயங்கி தொடங்கியது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து திட்டமிட்டபடி இன்று தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் ஜூன் மாதம் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 843 பள்ளிகளும் இன்று முதல் செயல்பட்ட தொடங்கியுள்ளது. மாணவர்கள் புதிய சீருடையில் உற்சாகத்துடன் பள்ளிக்கு படையெடுத்தனர். முதல்நாள் மாணவர்களை நல்ல மனநிலையில் உற்சாகமாக வரவேற்க பல பள்ளிகளில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள அரசு உதவி பெறும் தேசிய துவக்கப்பள்ளியில், மற்றும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீகுருஞான சம்பந்தர் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பு நிகழ்ச்சியாக மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை அழைத்து வந்து வித்தியாசமாக வரவேற்பளித்தனர். காலை பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள் துதிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்து வரவேற்பு அளித்தது. தொடர்ந்து மாணவர்கள் யானைக்கு மலர்களை தூவி வணங்கி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர்.
யானை மூலம் வரவேற்பளித்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து மாணவர்கள் மீது யானை துதிக்கை மூலம் மலர்களை தூவி ஆசீர்வாதம் செய்தது. வித்தியாசமான இந்த வரவேற்பு மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்