தஞ்சைக்கு நண்பருடன் சுற்றுலாவாக வந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆற்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் லிதர்ஷன் (21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இவர்கள் இருவரும் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரி விடுமுறையை ஒட்டி தஞ்சைக்கு சுற்றுலா செல்ல லிதர்ஷன், நிதின் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இருவரும் சென்னையிலிருந்து பைக்கில் தஞ்சாவூருக்கு நேற்று வந்துள்ளனர்.



பின்னர் பெரியகோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகில் இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வருவதை வேடிக்கை பார்த்துள்ளனர். கல்லணைக் கால்வாயில் இர்வீன் பாலம் தற்போது புதிதாக கட்டப்பட்டுளள நிலையில் தண்ணீர் திறப்பு தாமதமானது. பின்னர் கடந்த வாரத்தில் புதிய பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் சென்று வர அனுமதிக்குப்பட்டது. பின்னர் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுத்தண்ணீர் வேகம் அதிகம் உள்ளது. ஆனால் இதை அறியாத லிதர்ஷன், நிதின் இருவரும் இர்வீன் பாலம் அருகே இர்வீன் பாலம் அருகே பிள்ளையார் கோயில் பகுதியில் கல்லணைக் கால்வாயில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் லிதர்ஷன் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் நிதின் லிதர்ஷனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீரில் வேகம் அதிகம் இருந்தது. உடன் அவர் உதவி கேட்டு அலறியுள்ளார். நிதின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது லிதர்ஷன் ஆற்றில் மூழ்கியது தெரிய வந்துள்ளது. அவர்களும் லிதர்ஷனை காப்பாற்ற முயற்சி செய்து முடியவில்லை. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட லிதர்ஷனை காணவில்லை.
 
இதுகுறித்து உடன் தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து லிதர்சனை தேடி வந்தனர். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.

இந்நிலையில் இன்று 2ஆவது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்ஷனை தேடினர். அப்போது தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியில் உள்ள நெய்வாய்க்காலில் லிதர்சன் உடல் பிணமாக மிதந்து சென்று கொண்டிருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் லிதர்ஷன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தஞ்சை கிழக்கு போலீசார் லிதர்ஷன் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண