மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட செறுகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று காலை நடைபெற்று உள்ளது. பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தூர்வாரி மண்ணை கரையில் அணைத்த போது மண்ணுக்கு அடியில் ஏதோ ஒரு பாறை தென்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து. அது என்னவென்று தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது 5 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன பழமையான பெருமாள் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெருமாளை கரையில் எடுத்து வைத்து பூக்களை அணிவித்து தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மற்றும் பொரையாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழமையான பெருமாள் சிலையை கைப்பற்றி எடுத்து வந்து தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் வாய்க்கால் தூர்வாரும் போது கடவுள் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளது. குறிப்பாக 108 திவ்ய தேசங்களில் பல திவ்ய தேச பெருமாள் கோயில்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிலையில் தற்போது கிடைக்கப்பட்டுள்ள பெருமாள் சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எந்த பெருமாள் கோயிலில் சேர்ந்தது என்றும், மற்றும் சிலை குறித்த மற்ற தகவல்களை தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.