தஞ்சாவூர்: கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெறக் கோரி வரும் 25ம் தேதி  பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் தெரிவித்துள்ளார்.


கர்நாடகத்திடமிருந்து ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரை பெற்று தரக் கோரி டெல்டா மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் ஜூலை 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி நடராஜன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது, நீர்மட்டம் 103 அடியாக  இருந்தது. அணையின் நீர்மட்டம் ஒரு மாதம் கடந்த பின்பு தற்போது 75 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. அணைக்கு கடந்த 35 நாள்களாக 200 கன அடிக்குள்தான் நீர் வரத்து உள்ளது.


தற்போது உள்ள நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களுக்குதான் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பயிர்களுக்கு தற்போதே போதிய தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடைப் பகுதிகளுக்கு முழுமையாகத் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.




கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக  தொடங்கியிருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.90 டிஎம்சி தண்ணீர்தான் வந்தது. ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரும் வழங்காமல் உள்ளனர்.


டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரியில் மாத வாரியாக கர்நாடகம் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 122.57 டிஎம்சி தண்ணீர் மிக முக்கியமானது.


எனவே, டெல்டா மாவட்ட குறுவை சாகுபடியைப் பாதுகாக்க உடனடியாக தண்ணீர் விட கர்நாடகம் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்திருந்தாலும், பற்றாக்குறை கால விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் விட வேண்டும்.


இதற்கான நடவடிக்கையை காவிரி நதிநீர் ஆணையமும், மத்திய அரசும் மேற்கொள்ள வலியுறுத்தியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள வட்டத் தலைமையிடங்களில் வரும் 25ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அப்போது, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன், தலைவர் பி. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.