மயிலாடுதுறையை அடுத்த மேலபட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (35) பொக்லைன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மாலை நண்பர்கள் உடன் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சதீஷை கத்தியுடன் விரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய சதீஷை துரத்தி சென்றவர்கள் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் அவரை மடக்கி பிடித்து நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் சதீஷ் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷின் அண்ணன் வினோத் என்பவர் மயிலாடுதுறையை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதுகுறித்து, கடந்த சில மாதங்களாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்துவந்ததும், இந்த முன்விரோதம் காரணமாக இன்று சதீஷிடம் வலியச் சென்று தகராறில் ஈடுபட்டு விரட்டிச் சென்று கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதையடுத்து, மயிலாடுதுறை காவல்துறையினர் பழனிவேல் மற்றும் பழனிவேலுவின் மச்சான் மாதவன் ஆகிய இருவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உயிரிழந்த சதீஷின் உறவினர்களும், நண்பர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.