திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு தரப்பினர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விளைநிலங்களில் முழுவதுமாக மழை நீர் தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுக கூடிய நிலை உருவாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றின் கரைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழு அளவில் கண்காணித்து பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அதிகாரிகள் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கனமழையின் காரணமாக வெட்டாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 



 

திருவாரூர் மாவட்டம் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் வெட்டாற்றின் மேல் கரையில் ஏற்பட்டிருக்கும் உடைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்,  திருவாரூர் வட்டம் நடப்பூர் கிராமம் வெண்ணாறு வடிநில கோட்டத்திற்குட்பட்ட எண்கண், வடகண்டம், கங்களாஞ்சேரி நடப்பூர் வழியாக நாகப்பட்டினத்தில் கடலில் சேரும் வெட்டாறு மேல்கரை பழையவலம் முதல் உக்கடை வரை செல்லும் ஆற்றை ஒட்டிய சாலையில் 6 மீட்டர் அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறையின் மூலம் உடைப்பை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



 

தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சாக்குகளில் மணல் நிரப்பப்பட்டு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வட்டங்களிலும் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருந்து வருகிறார்கள். எந்த நேரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களை மீட்டு உடனடியாக பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் வசித்து வருகிறார்களோ அந்த பகுதியில் முழு கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், வட்டாட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர உடனிருந்தனர்.