மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டாவபுரம் பகுதியில் இருந்து சேத்தூர் கிராமம் வரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. ஆனந்த தாண்டவபுரம், பன்னீர்தலைமைடு, கீழ மருதாந்தநல்லூர், மேல மருதாந்தநல்லூர், பொன்வாசநல்லூர் சேத்தூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரதான சாலை இதுவாகும்.




மேலும், இந்த சாலையில் தினந்தோறும் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். தொடர்ந்து சாலை சரியில்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸ் சேவை தங்கள் பகுதியில் முற்றிலுமாக தடைபடுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சேதமடைந்த சாலையை உடனடியாக சீர் செய்து புதிய சாலை அமைத்து தரக்கோரி சேத்தூர், உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் மண்ணிப்பள்ளம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து, புதிய தார் சாலை அமைக்க வேண்டும்,  மயிலாடுதுறையில் இருந்து சேத்தூர் வரை தினம்தோறும் 8 முறை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை நான்கு முறை மட்டும் இயக்கப்படுவதை கண்டித்தும், அனைத்து பேருந்துகளையும் சேத்தூர் எல்லை வரை முழுமையாக இயக்கக்கோரியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  இந்த சாலை மறியல் போராட்டத்தினால் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 




இதனால் இப்பகுதி வழியாக தேர்வுக்கு செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு  செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மணல்மேடு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாதத்திற்குள் சாலை சரி செய்யும் பணி முடிக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தனர் அதனை ஏற்று சாலைமறியல் போராட்டத்தை  கைவிட்டு களைந்து சென்றனர்.




மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டியில் மனிதனை  இறக்கி பணி செய்வதைக் கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்.


மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கி 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 3250 ஆள்நுழைவு தொட்டிகள் உள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாதாள சாக்கடை பைப்லைன் மற்றும் ஆள்நுழைவுத் தொட்டிகளில் மணல் படிந்து தூர்ந்தால் 50 சதவிகித சாக்கடை நீர் வெளியேறி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை சரி செய்ய ஆங்காங்கே ஆள் நுழைவுத் தொட்டியிலிருந்து அடைப்புகளை நீக்குவதும் மறு தொட்டிக்கு கழிவு நீரை மாற்றுவதும் என நகரில் பல்வேறு இடங்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. .




ஆள்நுழைவுத் தொட்டிக்குள் மனிதனை இறக்கி அடைப்புகளை நீக்குவதும் கழிவுகளை அகற்றுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகரின் கண்ணாரத் தெரு பகுதியில் உள்ள ஆள் நுழைவுத் தொட்டிக்குள் மனிதனை இறக்கி பணி செய்து கொண்டிருந்தனர்.  இதைக் கண்ட விசிக்கவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 




உடனடியாக ஆள்நுழைவுத் தொட்டியில் இருந்து பணியாளர் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து விசிகவினர் கடலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் குமார் தலைமையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நகராட்சி நிர்வாகத்தினர்  பாதாள சாக்கடை கழிவு நீர் சரி செய்யும் பணியை  பாதியிலேயே நிறுத்திவிட்டு  சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.