மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைவீதியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகப்படியாக 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் தமிழகத்தில் 122 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழியில் அதிக மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால் விவசாய விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்கு மேலாக விலைநிலங்கள் தண்ணீர் வடியததால், சம்பா சாகுபடி நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் அழிந்து போனது. இதற்கு கணக்கொடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இருந்தும், மழை பாதிப்படைந்து ஒரு மாதத்திற்கு மேல் கடந்தும் அரசு இதுநாள் வரை நிவாரணம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நிவாரணம் கோரி இன்று அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு கொள்ளிடத்தில் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் அதற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியை பேரிடர் பாதிக்கப்பட்ட தாலுகாவாக அறிவிக்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வேலை இழந்த விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் தொகையை அரசை செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென விவசாயிகள் அனைவரும் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கொள்ளிடம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதனால் சீர்காழி - சிதம்பரம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்பட்டது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 26 -ம் தேதி சீர்காழியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்று குறிப்பிட்டதக்கது.