மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் கடற்கரையில் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர். மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி கடந்த 2014-இல் பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை அக்டோபர் 2 -ம் தேதி தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி அருகே காரைமேடு பகுதியில் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் கந்தன் தலைமையில் 30 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 100 -க்கும் மேற்பட்டோர் பூம்புகார் கடற்கரையில் தூய்மை பணியை தொடங்கினர். பூம்புகார் கடற்கரை மணல் பரப்பில் சிதறி கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், ஐஸ்கிரீம் கப், பேப்பர், பிளாஸ்டிக் பாட்டில்கள், போன்றவற்றை ஒவ்வொன்றாக எடுத்து சுத்தம் செய்தனர்.
பாரத பிரதமரின் முக்கிய நோக்கம் தூய்மை இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள 14 மையத்திலும் தூய்மை பணி கடற்கரை ஓர கிராமமான பூம்புகார், தொடுவாய் மற்றும் அந்தமான் கடற்கரை பகுதியிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களிலும் அகில இந்திய அளவில் இப்பணி நடைபெற உள்ளது. குறிப்பாக கடற்கரை பகுதியில் வீசப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி கடலில் கலந்து மீன்கள் உண்ணும் பொழுது அந்த மீன்களை சாப்பிடும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதியில் ஐஸ்கிரீம் பிளாஸ்டிக் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.