மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும்  சீர்காழி நகர  கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை  செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து  செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள  செங்கரும்புகளை பார்வையிட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை  செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 




அப்பொழுது, விவசாயிகள் கடந்தமாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ், புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டதால்  வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு அதிகமாக செய்துள்ளதாகவும், எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனை கேட்டுக்கொண்ட ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ஆய்வில் மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது:


பொங்கல்  கரும்பு கொள்முதலில்  இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும். கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் நியாய விலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு? 




செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து ஆரம்ப கட்டத்தில் தனக்கும் சந்தேகம் இருந்தது,   சாதாரண அரிசியில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி எங்கு உள்ளது என்று கண்டறிய முடியாத அளவிற்கு 500 கிலோ அரிசிக்கு 1 கிலோ மட்டுமே சிறிதளவு மட்டுமே கலந்து விற்பனை செய்யப்பட உள்ளது. அதும் தமிழகத்தில் பெண்களுக்கு ரத்த சோகை,  குழந்தைகள் சத்து குறைபாடுடன் காணப்படுகிறது அது போன்ற சத்து குறைபாடுகளை நீக்கவே இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. நம்ப கட்டத்தில் அயோடின் உப்பை எதிர்த்தார்கள் தற்போது அனைவரும் அதனை உண்டு வருகின்றனர். அதனால் நாமாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.




 குடும்ப அட்டையுடன் வங்கி கணக்கு இணைப்பு 


வங்கி கணக்குகளை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சாதாரண நடைமுறை மட்டுமே, இதற்கும் பொங்கல் பரிசுத்தொகை பெறுவதற்கும் அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் எந்த ஒரு தடையும் இல்லை. 16.86 லட்சம் பேர் மட்டுமே வங்கி கணக்குகளை குடும்ப அட்டையுடன் இணைக்காமல் உள்ளார்கள் என்றும், வங்கி கணக்குகளை இணைக்க விருப்பப்படும் பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் நேரடியாக இலவசமாக இணைத்துக் கொள்ளலாம், வங்கி கணக்கு இணைக்க வேண்டும் என்று எங்கேயும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை எனவும், இதனால் குடும்ப அட்டை தகுதி நீக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது என்பதும், அதுபோன்று  தொடர்ந்து பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகளை நீக்கம் செய்யப்படும் என்பது வதந்தி எனவும், தமிழகத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகளை மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படும் என்றார்.