ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், பேராலயங்களில் அதிகாலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதே போல் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், கரந்தை கோடியம்மன் கோயில், பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோல் கும்பகோணத்தில் உள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் சென்று சென்றுக் கொண்டிருந்தனர். இதேபோல் பிற மாவட்டம், மாநிலத்திலிருந்தும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
2023-ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, தஞ்சாவூர் மேரீஸ் கார்னரில் உள்ள திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி பேராலய பங்குத் தந்தை ஏ.எம்.ஏ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து புத்தாண்டு பிறந்தவுடன் பங்கு மக்கள் கைத்தட்டி மகிழ்ந்ததுடன், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர். அப்போது வானில் வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் கூட்டு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் உதவிப் பங்குத் தந்தை ஏ.பிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை சாலையில் உள்ள குழந்தை இயேசு ஆலயம், சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம், மகர்நோன்புசாவடி தூய பேதுரு ஆலயம், அந்தோணியார் ஆலயம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், மாதாகோட்டை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலய வளாகத்தில் புத்தாண்டை பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான சாம்சன் தலைமையில் துணை அதிபர், உதவி பங்குத் தந்தைகள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
பின்னர் பேராலய அதிபர் சாம்சன் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை அறிவித்ததும், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.