மயிலாடுதுறையில் புகழ் பெற்ற வதானேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து செல்லும் மயில் மின்கம்பியில் பட்டு உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தேசியப்பறவையான மயில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. மயில், கோழி இனத்தை சேர்ந்த பெரிய பறவையாகும். காடும், காடும் சார்ந்த பகுதிகளில் மயில் வாழ்ந்து வந்தது. இப்பறவை காடுகளில் கிடைக்கும் விட்டில் உள்ளிட்ட சிறு பூச்சிகள், பூரான், மண்புழு, சிறிய பாம்புகள் மற்றும் தானியங்களை உணவாக உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் மலைப்பகுதிகளிலும், முட்புதர்களிலும் வாழ்ந்து வந்த மயில் இனம் தற்போது வாழ்விடத்தை இழந்து தவிக்கின்றன. உணவுக்காக அவை விளை நிலங்களுக்கு படையெடுக்கின்றன.
முதலில் மனிதர்கள் நடமாட்டம், வாகனங்கள் சப்தம் கேட்டாலோ ஓடியும், பறந்தும் மறையும் மயில்கள் தற்போது மனிதர்களை கண்டு அச்சப்படவில்லை. விவசாய நிலத்தில் நாட்டு கோழிகளை போன்று மயில்கள் உலா வருகின்றன. இதனால் வயல்கள் நிறைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மயில்கள் கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. அதுவும் மாலை நேரத்தில் கூட்டமாக வரும் மயில்களுக்கு குடியிருப்பு வாசிகள், சிலர் தானியங்களை உணவாக கொடுக்கின்றனர். இதனால் வனப்பகுதியில் மட்டும் காணப்பட்ட மயில் இனங்கள், தற்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் போன்று மாறியுள்ளன. இவை மாலை நேரங்களில் வலம் வருவதை கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைவரும் ரசிக்கின்றனர்.
ஆனால் இவைகள் வாகனங்களில் அடிப்பட்டுவது உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி வடகரையில் புகழ்பெற்ற வழிகாட்டும் வள்ளல் என்று கூறப்படும் வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற குரு பரிகாரம் ஆலயமான இந்த ஆலயத்தில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம். வழக்கம் போல் நேற்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் உரசி உடலில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடியுள்ளது.
இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில், மயில் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்த சீர்காழி வனத்துறையினர் மயிலின் உடலை கைப்பற்றி கொண்டு சென்றனர். ஆவணி வெள்ளிக்கிழமை ஆன வரலட்சுமி நோன்பு தினத்தன்று, முருகனின் வாகனமாக வணங்கப்படும் மயில் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.