தஞ்சாவூர்: தலைவரிடம் அனுமதி பெற்று விரைவில் அடுத்த போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வு ரத்தாகும் வரை திமுக இளைஞரணி ஓயாது என்று திமுக இளைஞரணி செயலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
மத்திய பாஜக அரசு நாட்டை சீரழித்து வருகிறது. இதற்கு மணிப்பூரில் 4 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரங்களே உதாரணம். இதில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதால், நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வருவதற்கு அச்சப்படுகிறார். கடைசியாக நாடாளுமன்றத்துக்கு வந்த மோடி திமுக குறித்து ஒன்றரை மணிநேரம் பேசிவிட்டு, மணிப்பூர் பற்றி 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோடி எங்கு சென்றாலும், திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், அதனால் கருணாநிதி குடும்பம்தான் பயனடைவதாகவும் கூறுகிறார். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களும் கருணாநிதியின் குடும்பங்கள்தான். பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளில் அதானி, அம்பானி குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளன என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
நீட் தேர்வால் 21 மாணவர்களை இழந்துள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்ய முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிராக அதிமுகதான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்தப் போராட்டத்தையும் திமுகதான் நடத்தியது. தலைவரிடம் அனுமதி பெற்று விரைவில் அடுத்த போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வு ரத்தாகும் வரை திமுக இளைஞரணி ஓயாது.
நீட் தேர்வு ரத்து உத்தரவாதத்தைக் கொடுத்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்கிற ஒரு தீர்மானத்தை அதிமுகவால் போட முடியவில்லை. 2021 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அடிமைகளை விரட்டினோம். 2024 ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானரையும் விரட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS மற்றும் JIPMER ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது.