மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காத மழை நீர் தேங்கியும் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் ஊராட்சியின் முதலாவது வார்டான சோலையாம்பட்டினம் கிராமத்தில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலை கோடங்குடி ஊராட்சியையும், கிளியனுரையும் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட 1 கிலோ மீட்டர் உள்ள இச்சாலையானது, தற்போது குண்டும் குழியுமாகவும், கற்பிக்கற்கள் பெயர்ந்தும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கி, சேரும் சகதியமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகமோசமாக காணப்படுகிறது.
இக்கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளியனூரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு மற்றும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியதால் மிகவும் சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக மாறியதால் பள்ளி மாணவர்கள் மற்றும் விபத்து நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடியாததால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். கோடங்குடி மற்றும் சோலையாம்பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 60 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கிளியனூரில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு இந்த சாலையை கடந்து தான் செல்கின்றனர்.
கடந்த பத்து தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் இச்சாலை சேரும் சகதியுமாக உள்ளதால், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக பலமுறை உரியவர்களிடம் மனு அளித்தும் அதிகாரிகள் இந்த தார் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50 -க்கும் மேற்பட்டோர், இன்று சாலையில் நாற்று நடவு நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சாலையை உடனடியாக சீர் செய்து புதிய தார் சாலை அமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.