2023 ஆம் ஆண்டுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் யாருக்கு விருதுகள் கிடைத்துள்ளது என்பதை காணலாம். 


திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆஸ்கர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கான வழங்கப்படும் மிக உயரிய விருதாக எம்மி விருதுகள் உள்ளது. தொலைக்காட்சி தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இந்த எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று (நவம்பர் 21) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.


இதில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் 'Vir Das: Landing' தொடருக்காக  சிறந்த தனித்துவமான நகைச்சுவை தொடருக்கான பிரிவில் விருதை வென்றது. இதற்கான விருதை அப்படத்தின் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான விர் தாஸ் பெற்றுக் கொண்டார். அவர் இந்த எம்மி விருதை  'Derry Girls - Season 3' படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.






நெட்பிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும் 'Vir Das: Landing'படம் இந்திய மற்றும் அமெரிக்க கலாச்சாரங்களை அரசியல் ரீதியாக பிரதிபலிப்பதை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக 2021 ஆம் ஆண்டிலும், வீர் தாஸ் தனது 'டு இந்தியா' என்ற காமெடி தொடருக்காக எம்மி சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அதேசமயம் இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு, 'டெல்லி கிரைம் 2' க்காக (நெட்பிளிக்ஸ்) நடிகை ஷெஃபாலி ஷா மற்றும் 'ராக்கெட் பாய்ஸ் 2' (சோனி லைவ்) நடிகர் ஜிம் சரப் ஆகியோரும் சர்வதேச எம்மி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில்   நடிகை ஷெஃபாலி ஷா,  லா கைடா படத்தில் நடித்த கர்லா சோசாவிடம் விருதை இழந்தார்.