தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில், 2022 ஏப்ரல் 30 வரை காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 9 அன்று அதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூன் 20 - ல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 9ல் வாக்குப்பதிவும், ஜூலை 12ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஊரகப்பகுதி மற்றும் நகர்புறப்பகுதி என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் 34 பதவியிடங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகளாகும். அதாவது, மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடலாம்.
இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இவற்றில் 35 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது 19வது வார்டில் போட்டியிட அதிமுக சார்பில் விண்ணப்பித்திருந்த அன்னதாச்சி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் காலியாக உள்ள வார்டுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் 19வது வார்டில் போட்டியிட அனைத்துக் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட கீதா செந்தில்முருகன் என்பவர் இன்று மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்