தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில், 2022 ஏப்ரல் 30 வரை காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஜூலை 9 அன்று அதற்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஜூன் 20ல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 9ல் வாக்குப்பதிவும், ஜூலை 12ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடங்கள் விபரம்:

ஊரகப்பகுதி:

பதவிகள் எண்ணிக்கை
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 2
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 20
ஊராட்சி தலைவர் 40
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 436
மொத்தம் 498

 

நகர்புறப்பகுதி:

பதவிகள் எண்ணிக்கை
மாநகராட்சி கவுன்சிலர் 2
நகராட்சி கவுன்சிலர் 2
பேரூராட்சி கவுன்சிலர் 8
மொத்தம் 12

 

ஊரகப்பகுதி மற்றம் நகர்புறப்பகுதி என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதில் 34 பதவியிடங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகளாகும். அதாவது, மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடலாம். 

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி பேரூராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல்

அதற்கான வேட்புமனுத்தாக்கல் நடந்து வரும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 34 வேட்பாளர்களுக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அதிமுகவில் தற்போது நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையால், வேட்பாளர்களுக்கான கட்சி அங்கீகார கடிதத்தில் யார் கையெழுத்து இடுவது என்கிற சிக்கல் உள்ளது. இபிஎஸ் கையெழுத்திட்டு கடிதம் வழங்கினால், அதை ஓபிஎஸ் எதிர்க்க அல்லது சட்டரீதியாக ரத்து செய்ய வாய்ப்புள்ளது. அதே போல ஓபிஎஸ் கையெழுத்திட்டால் இபிஎஸ் ஏற்க மறுப்பார். இப்போதுள்ள சூழலில் இருவரும் கையெழுத்திட வாய்ப்பில்லை. எனவே, கட்சி அங்கீகார கடிதப் பிரச்சனையில் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படவோ அல்லது சுயேட்சையாக ஏற்கப்படவோ வாய்ப்புள்ளது. 

அதிமுக உட்கட்சி பூசலால் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு எழுந்துள்ள இந்த சிக்கலுக்கு விடை தெரியாமல், வேறு வழியின்றி அதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.