மயிலாடுதுறையில் வாரிசுகளை மறைத்து முறைகேடாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி பல முறை மனு அளித்தும் பயன் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில் திரௌபதி அம்மன் கோயிலை சேர்ந்தவர் நீலமேகம். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வாரிசுகளை மறைத்து முறைகேடாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தனது சகோதரர் ராஜ் என்பவர் உடன் பிறந்தவர்களை மறைத்து முறைகேடாக வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார்.
தனது தந்தை வைத்தியநாதனுக்கு இரண்டு மனைவிகள், 7 பிள்ளைகள் உள்ளனர் என்றும், தனது தந்தை 2006 -ம் ஆண்டு இறந்த நிலையில் ராஜ் என்பவர் தனது தந்தைக்கு 3 வாரிசுகள் மட்டுமே உள்ளதாக ஆவனங்களை அளித்து முறைகேடாக 2008 -ஆம் ஆண்டு வருவாய்துறையினரிடம் வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார். ஆகையால் ராஜ் அரசு அதிகாரிகளை ஏமாற்றி முறைகேடாக வாங்கிய வாரிசு சான்றிதழை ரத்து செய்யகோரி 2021 -ம் ஆண்டு முதல் தாலுக்கா அலுவலகம் முதல், முதலமைச்சர் தனிபிரிவு வரை புகார் மனு அளித்துவிட்டதாகவும், புகார் மனு அளித்ததால் எதிர் தரப்பினர் தன்னை மிரட்டுவதாகவும்,
இதுநாள் வரை நான் அளித்த புகார் மனுக்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லை என்றும், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றின் உண்மை நகல் வழங்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது பதிவறையில் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை என்று தகவல் தந்துள்ளதாகவும், உடனடியாக சட்டத்துக்கு புறம்பாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்து, தனது தந்தை வைத்தியநாதனுக்கு உள்ள 5 மகன்கள் 2 மகள்களுக்கான வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார்.