தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றோதல் செய்த மாணவர்களுக்குப் பரிசு மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை ஒப்பளிப்பு அரசாணை ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வழங்கினார்.


தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த மாணவர்கள் 10 பேருக்கு ரூ.15,000 க்கான காசோலையையும் முதலமைச்சர் கையெழுத்திட்ட சான்றிதழ் மற்றும் அரசாணையையும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வழங்கினார்.


மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் வயத முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைப் பெற்றுவரும் 12 பேருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை ஒப்பளிப்பு அரசாணையும் வழங்கப்பட்டன.


தொடர்ந்து வடஅமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் தஞ்சாவூர் திருக்குறள் முற்றோதல் பயிற்றகம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. திட்டத்தின் தொடக்கமாக முதலில் 27 பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டது. 


தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற 6 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு, தஞ்சாவூர் திருக்குறள் முற்றோதல் மண்டலப் பயிற்சியாளர் திருக்குறள் தூயர் கோபிசிங் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


தமிழகத்தில் 1956-ல் தமிழ்மொழி ஆட்சி மொழி என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது 23.01.1957-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த ஆண்டே அரசு அலுவலகங்களில் தமிழ்மொழி ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் ஆட்சி அலுவலக விதிகள், விதித் தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.


எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும், தமிழ் வளர்ச்சித் துறை என்ற தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது. இதையடுத்து 1971-ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறைத் தலைமை அலுவலகத்தை தோற்றுவித்தது.


ஆட்சிமொழித் திட்ட ஆய்வு தொடர்பாக இயக்குநர், துணைஇயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் முன் பயணத் திட்டம் தயார் செய்யப்பட்டு அதன்படி அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அரசு அலுவலக பதிவேடுகள், கோப்புகள், காலமுறை அறிக்கைகள், கடிதப் போக்குவரத்து, அலுவலக ஆணைகள் உள்ளிட்டவை தமிழ்மொழியை பின்பற்றி செயல்படுத்தப்படுகின்றனவா என ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் மதிப்பெண்ணும் அளிக்கும் பணியை மாநகராட்சிப் பகுதிகளில் துணை இயக்குநர் நிலையிலும், மாவட்டங்களில் உதவி இயக்குநர் நிலையிலும் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.


அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் மொழிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் உறுதுணைபுரியும் வகையில், பல்வேறு திட்டங்கள், தமிழ் வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.