வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் 08 ஆம் தேதி வரை, தென்னிந்திய பகுதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான அளவில் மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு. இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. தொடர் மழை காரணமாக ஹைதராபாத் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது. 






கனமழை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  






பெருநகர ஹைதராபாத் முனிசிபல் மாநகராட்சி ஆணையர், அடுத்த சில மணிநேரங்களுக்கு மிகவும் அவசியமானால் தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். மக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால்  040-21111111 அல்லது 9000113667 உதவி எண்களும் தொடர்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.   


மேலும் ஹைதரபாத் வானிலை ஆய்வு மையம், நகரின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தெலுங்கானாவின் மேடக், காமரெட்டி, மகபூப்நகர், அதிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத், கரீம்நகர், பெத்தப்பள்ளி, பத்ராத்ரி கொத்தகுடம், கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட்டை, சித்திப்பேட்டை, யாதாத்ரி புவங்கிரி, ரங்காரெட்டி, ஹைதராபாத், மேட்சல் மல்காஜிகிரி, சங்காரெட்டி, சங்காரெட்டி, சங்காரெட்டி, சங்காரெட்டி, விகாராபாத், ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், தெலுங்கானாவின் மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், ஜகித்யால், ராஜன்னா சிர்சில்லா, ஜெயசங்கர் பூபாலபள்ளி, முலுகு, மகபூபாபாத், வாரங்கல், ஹனம்கொண்டா, ஜனகான் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.