மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரத்தை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி தீபன்ராஜ். இவர் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கி பலதரப்பு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார். பட்டயப் படிப்பு முடித்துவிட்டு சென்னை தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்த தீபன்ராஜ், கடந்த ஆண்டு ஊரடங்கால் வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான சேத்தூருக்கு வந்துள்ளார். 




சென்ற ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த பலரும் தங்கள் வேலையை விட்டும், வேலையை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி மீண்டும் அவர்கள் வேலையின்றி அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் வேலை இல்லையே என்று கவலை கொண்டு சோர்ந்துவிடாத தீபன்ராஜ் தனது தந்தைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து, தங்கள் வயலின் வேலை போக மீதமுள்ள நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இயல்பாகவே துன்பத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட தீபன்ராஜ் கூலி வேலையில் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள உணவிற்கு கஷ்டப்படும் ஏழை, ஏளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம், குடிநீர், பிஸ்கட்  உள்ளிட்டவற்றை சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறார். 




இது குறித்து தீபன் ராஜ் கூறுகையில், கேரளாவில் கூடை முடையும் தொழில் செய்து வந்த தன் தந்தை புயலில் சிக்கிகொண்டு தவித்தபோது கேரள மக்கள் உதவி செய்து காப்பாற்றியதால், ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், சென்னையில் வேலை பார்த்தபோது கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டி உதவி செய்துள்ளதாகவும், கூலி வேலை செய்து ஓர் ஆண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு தானாக உணவு தயாரித்து வழங்கி வருவதாக தெரிவித்தார். 




பணம் இருக்கும் பலரும் இந்த பேரிடர் காலத்தில் உதவ மனம் இன்றி தான், தன் குடும்பம் என செயல்படுவதும், அவ்வாறு உதவி செய்தாலும் அதனை விளம்பரத்திற்காக என்ற நிலையில் செய்யும் உலகில் தான் வலது கைக்கு கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என நினைக்கும் தீபன்ராஜ் போன்ற மனிதர்களும் வாழ்கின்றனர். தீபன்ராஜின் இந்த சேவை மனப்பான்மை பார்க்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் என்றால் அது மிகையாகாது.